இலங்கையில் டித்வா புயலின் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கண்டி மாவட்டத்தில் 88 பேரும், பதுளை மாவட்டத்தில் 71 பேரும், நுவரெலியாவில் 68 பேரும், குருணாகலையில் 37, கேகாலையில் 12 பேரும் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், நாடு முழுவதிலும் ஏற்பட்ட சீரற்ற காலநிலையில் சிக்கி, இதுவரை 370பேர் காணமற்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அதிகபட்சமாக கண்டியில் 150பேர் காணாமற்போயுள்ளனர். நுவரெலியாவில் 54 பேர், பதுளையில் 53 பேர், கேகாலையில் 46பேர், குருணாகலில் 35 பேர் உட்பட 370பேர் காணாமற்போயுள்ளனர். இந்நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடுமென அஞ்சப்படுகிறது.

இதேவேளை, நாடு முழுவதும் இயற்கைப் பேரிடர் காரணமாக இதுவரை, 3 இலட்சத்து 9ஆயிரத்து 607பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்தமுகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில். ஒரு இலட்சத்து 96ஆயிரத்து 790பேர் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட பேரிடரைத் தொடர்ந்து மீட்புப் பணிகளைப் பேரிடர் மீட்புப் படையினர், இலங்கைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் இந்திய பேரிடர் மீட்புப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகள் மற்றும் காணாமற்போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

